இரு தடுப்பூசிகளையும் சேர்த்து பயன்படுத்தி ஆய்வு மேற்கொள்ள அனுமதி.!
கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசி மருந்துகளை சேர்த்து பயன்படுத்தி ஆய்வு நடத்த இந்திய மருந்து கட்டுப்பாடு வாரியம் அனுமதி.
இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் காரணமாக அவசர கால பயன்பாட்டிற்கு கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இந்த இரு தடுப்பூசிகள், இரண்டு டோஸ்களாக போடப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து, ஸ்புட்னிக், பைஸர் போன்ற தடுப்பூசிகளுக்கும் அவசரகால பயன்பாட்டு அனுமதி வழங்கப்பட்டது.
இதுபோன்று ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் ஒரே டோஸ் போடும் வகையில் தயாரித்துள்ள தடுப்பூசிக்கு மத்திய அரசு அவசரகால பயன்பாட்டு சமீபத்தில் அனுமதியை வழங்கியிருந்தது. இதனிடையே, பயன்பாட்டில் உள்ள கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை இணைத்து பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும் என்று ஐசிஎம்ஆர் (ICMR) தெரிவித்திருந்தது.
ஒருவர் ஒரு டோஸ் கோவிஷீல்டும், இரண்டாவது டோஸ் கோவாக்சினும் செலுத்திக் கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது என்றும் ஐசிஎம்ஆர் குறிப்பிட்டியிருந்தது. இந்த நிலையில், இருவேறான கொரோனா தடுப்பூசிகளை ஒருவர் பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும் என ஐசிஎம்ஆர் தெரிவித்ததை அடுத்து, கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசி மருந்துகளை சேர்த்து பயன்படுத்தி ஆய்வு நடத்த இந்திய மருந்து கட்டுப்பாடு வாரியம் அனுமதி அளித்துள்ளது.