5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்த அனுமதி..! உயர்நீதிமன்றம்
5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்த கர்நாடகா உயர்நீதிமன்றம் அனுமதி.
மாநில வாரிய பாடத்திட்டத்தில் படிக்கும் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகளை நடத்த கர்நாடகா உயர்நீதிமன்றம் மாநில அரசுக்கு அனுமதி அளித்துள்ளது. இதில் தோல்வியடைந்த மாணவர்களை தடுத்து வைக்காமல் அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த தேவையான பயிற்சி மற்றும் தீர்வு வகுப்புகளை அவர்களுக்கு வழங்கவும், தோல்வியடைந்த மாணவர்களுக்கு மதிப்பெண் தகவல்களை ரகசியமாக தெரிவிக்கவும் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், நடத்தப்படும் தேர்வில் பாடத்திட்டத்தில் உள்ள கேள்விகள் இருக்க வேண்டும் என்றும், பாடத்திட்டத்திற்கு வெளியில் இருந்து எந்த கேள்விகளும் கேட்கக்கூடாது என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கர்நாடக பள்ளி தேர்வு மற்றும் மதிப்பீட்டு வாரியம் (KSEAB) மாநில வாரியத்துடன் இணைக்கப்பட்டுள்ள 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டு முதல் பொதுத் தேர்வுகளை நடத்தும் என்று பொது அறிவுறுத்தல் துறை டிசம்பர் மாதம் அறிவித்திருந்தது.
அதற்கு மாணவர்களிடையே அழுத்தம் மற்றும் பதற்றத்தை காரணம் காட்டி 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கட்டாயம் என்ற அரசாணையை ரத்து செய்யக் கோரி, தனியார் பள்ளி மேலாண்மை சங்கங்கள் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. நீதிபதி பிரதீப் சிங் யெரூர் அடங்கிய ஒற்றை நீதிபதி அமர்வு இந்த மனுவை விசாரித்து 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு வாரியத் தேர்வுகளை கட்டாயமாக்கும் அரசு சுற்றறிக்கையை ரத்து செய்தது. பின்னர், இதனை எதிர்த்து மாநில அரசு மேல்முறையீடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.