சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி ..!திருவாங்கூர் தேவஸம் போர்டு மறு சீராய்வு செய்யக்கோரி மனு தாக்கல்..!
சபரிமலை வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மறு சீராய்வு செய்யக்கோரி மனு தாக்கல் செய்வோம் என்று திருவாங்கூர் தேவஸம் போர்டு தலைவர் பத்மகுமார் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் சபரிமலை கோயிலில் 10 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு அனுமதியில்லை என்பதால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
பின்னர் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டனர்.இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது.இந்த விசாரணையில் ஏன் அனைத்து வயது பெண்களும் கோவிலுக்குள் நுழையக் கூடாது? இந்து மதத்தில் தடை ஏதும் உள்ளதா என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.பின் சபரிமலை தேவசம் போர்டு தரப்பில் சபரிமலை கோயிலின் ஆகம விதிகளின்படியே மாதவிலக்கு பருவத்தில் உள்ள பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்று விளக்கமளிக்கப்பட்டது.மேலும் மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.
இந்த விவகாரத்தில் கேரள அரசு நீதிமன்றம் என்ன முடிவெடுத்தாலும் தங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்று தெரிவித்தது.உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் சபரிமலை வழக்கில் இன்று தீர்ப்பு அளித்தது.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தீர்ப்பில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்கள் வழிபட அனுமதி அளித்துள்ளார்.கோவிலுக்குள் பெண்கள் செல்ல அனுமதி மறுப்பது சட்ட விரோதம் என்று தீர்ப்பு வழங்கினார்.
இதன் பின்னர் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அளித்த தீர்ப்பை நீதிபதி கன்வில்கருடன் இணைந்து ஏற்பதாக நீதிபதிகள் நாரிமன், சந்திரசூட் அறிவித்தனர். சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என 5 நீதிபதிகள் அமர்வில் 4 நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.அதில் நீதிபதி தீபக் மிஸ்ரா,நீதிபதி கன்வில்கர், நீதிபதிகள் நாரிமன், சந்திரசூட் ஆகியோர் சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழகியுள்ளனர்.ஆனால் தலைமை நீதிபதி அமர்வில் நீதிபதி இந்து மல்ஹோத்ரா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்.
அவர் அளித்த தீர்ப்பில் சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று நீதிபதி இந்து மல்ஹோத்ரா மாறுபட்ட தீர்ப்பு வழங்கினார்.
இந்நிலையில் தீர்ப்பு தொடர்பாக திருவாங்கூர் தேவஸம் போர்டு தலைவர் பத்மகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறோம்.அதேபோல் சபரிமலை வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மறு சீராய்வு செய்யக்கோரி மனு தாக்கல் செய்வோம்.இதுகுறித்து தேவசம்போர்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும் மதத் தலைவர்களுடன் ஆலோசித்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்றும் திருவாங்கூர் தேவஸம் போர்டு தலைவர் பத்மகுமார் தெரிவித்துள்ளார்.