இலவச தரிசனத்துக்கு அனுமதி ரத்து – திருப்பதியில் பக்தர்கள் போராட்டம்!
திருப்பதியில் சிறப்பு தரிசனத்துக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்பட்டு இலவச தரிசனத்துக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டதால் ஏமாற்றம் அடைந்த பக்தர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் செய்ய தொடங்கியுள்ளனர்.
கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டிருந்தது. ஊரடங்கு தற்போது வரை அமலில் இருந்தாலும் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் மனநிலையை கருத்தில் கொண்டு அரசாங்கம் சில தளர்வுகள் அவ்வப்போது அறிவித்து வருகிறது. அதில் ஒன்றாக வழிபாட்டு தளங்களுக்கும் சில கட்டுப்பாடுகளுடன் மக்கள் செல்லலாம் என அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலும் அண்மையில் திறக்கப்பட்டு தேவஸ்தான அர்ச்சகர்கள், ஊழியர்கள் மற்றும் பக்தர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. மார்கழி மாதம் தொடங்கிய நிலையில் திருப்பதிக்கு தற்போது ஏராளமான பக்தர்கள் வர ஆரம்பித்துள்ளனர். இதனை அடுத்து கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக முன் அனுமதி பெற்று பக்தர்கள் பலர் வந்து செல்கின்றனர்.
ஆனால், தற்போது திருப்பதி தேவஸ்தான அர்ச்சகர் மற்றும் ஊழியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு எழுந்துள்ளது. மேலும் தற்பொழுது வீரியமுள்ள கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் ஜனவரி 3 ஆம் தேதி வரையில் திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு அனுமதி ரத்து செய்யப்பட்டு, சிறப்பு தரிசனத்திற்கு மட்டுமே அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த அறிவிப்பை அறிந்து கொள்வதற்கு முன்பாகவே திருப்பதிக்கு சென்ற இலவச தரிசன பக்தர்கள் அனுமதிக்கப்பட்டவில்லை. எனவே, பலர் ஏமாற்றம் அடைந்ததால், சாலைகளில் அமர்ந்து போராட்டம் செய்ய தொடங்கியுள்ளனர். இதனால் அந்த சாலையில் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.