2024 தேர்தலில் மக்கள் பாஜகவுக்கு பாடம் கற்பிப்பார்கள்.! நாகாலாந்து பிரச்சாரத்தில் காங்கிரஸ் தலைவர் கார்கே.!
மக்கள் பாஜகவிற்கு பாடம் கற்பிப்பார்கள், 2024 இல் காங்கிரஸ் கூட்டணி தான் மத்தியில் ஆட்சிக்கு வரும் என மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்.
நாகாலாந்து மற்றும் மணிப்பூரில் சட்டமன்ற பேரவைக்கான தேர்தல் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், நாகாலாந்தில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, 2024 இல் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி தான் மத்தியில் ஆட்சியமைக்கும் என்று கூறியுள்ளார்.
அவர் பேசியதாவது, மற்ற கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேசி வருகிறோம், இல்லையெனில் ஜனநாயகமும் அரசியலமைப்பும் அழிந்து விடும். 2024-பாராளுமன்ற தேர்தலை எப்படி வெல்வது என்பது குறித்து ஒவ்வொரு கட்சியுடனும் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு வருகிறோம். மேலும் கர்நாடகா, மணிப்பூர், கோவா மற்றும் மத்தியப் பிரதேசத்தில், எம்எல்ஏக்களுக்கு அழுத்தம் கொடுத்து அரசாங்கங்களை பாஜக கவிழ்ப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
இந்தியாவில் நீங்கள் ஜனநாயக முறையை பின்பற்றவில்லை, நாட்டை எதிர்கொள்ளும் ஒரே மனிதர் நான்தான் வேறு யாரும் என்னைத் தொட முடியாது என்று மோடி பலமுறை கூறியிருக்கிறார். நீங்கள் ஜனநாயகத்தில் இருக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும், சர்வாதிகாரி அல்ல, மக்களால் தேர்வு செய்யப்பட்டவர் தான் நீங்கள். 2024ல் மக்கள் உங்களுக்கு பாடம் புகட்டுவார்கள் என கார்கே தெரிவித்துள்ளார்.
மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதி, நாங்கள் பெரும்பான்மையைப் பெறுவோம், அரசியலமைப்பை பின்பற்றுவோம், ஜனநாயகத்தை பின்பற்றுவோம் என்று கார்கே கூறினார். 100 மோடிகள் அல்லது அமித் ஷாக்கள் வரட்டும், இது இந்தியா இங்கே அரசியலமைப்பு மிகவும் வலிமையானது, என்று அவர் மேலும் கூறினார்.