மாறுபட்ட கொரோனா வைரஸ்: “மக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம்”- மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்!
லண்டனில் பரவும் கொரோனா வைரஸால் மத்திய அரசு முழு முன்னெச்சரிக்கையுடன் உள்ளதாகவும், மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கேட்டுக்கொண்டார்.
சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தற்பொழுது பல நாடுகளில் கொரோனா பரவல் குறைய தொடங்கிய நிலையில், தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் தீவிரமடைந்துள்ளது. இதில் பல தடுப்பூசிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதை தொடர்ந்து, அவசர கால ஒப்புதலுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் இங்கிலாந்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், லண்டனில் கொரோனா பரவல் தற்பொழுது அதிகரித்துக் கொண்டே வருகிறது. அது வழக்கமான கொரோனா இல்லையெனவும், மாறுபட்ட புதிய வகையான கொரோனா வைரஸ் எனவும், இது இங்கிலாந்தின் தெற்குப் பகுதியில் வேகமாக பரவிவருகிறதாக சுகாதார செயலாளர் மாட் ஹான்ஹாக் தெரிவித்துள்ளார்.
இதனால் இங்கிலாந்தில் மூன்றடுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், இங்கிலாந்தில் பரவிவரும் இந்த வகையான கொரோனா வைரஸ் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறுகையில், மத்திய அரசு முழு முன்னெச்சரிக்கையுடன் உள்ளதால் மக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொண்டார். அதுமட்டுமின்றி, இன்று இரவு 11.59 முதல் பிரிட்டனுக்கு செல்லும் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படவுள்ளது, குறிப்பிடத்தக்கது.