குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக மக்கள் யோசனை தெரிவிக்கலாம்! – உள்துறை அமைச்சகம் அறிவிப்பு!
- மத்திய அரசானது குடியுரிமை சட்டத்தில் புதிய திருத்தத்தை கொண்டுவந்தது. இந்த சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடுமுழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
- தற்போது இந்த சட்டம் தொடர்பாக மக்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு அண்மையில் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. அதன் படி, இந்தியாவில் குடியேறிய வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மக்களில் முஸ்லீம்கள் தவிர இந்துக்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள், சமணர்கள் என ஏனைய மதத்தை சேர்ந்தவர்கள் 6 வருடம் தங்கியிருந்தாலே அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும். ஆனால், முஸ்லீம்கள் மட்டும் 11 வருடம் ( ஏற்கனவே உள்ள நடைமுறை ) இந்தியாவில் இருந்தால் தான் குடியுரிமை என்கிற சட்டத்தை மத்திய அரசனது இரு அவைகளிலும் நிறைவேற்றி குடியரசு தலைவர் ஒப்புதலும் பெற்றுவிட்டது. இச்சட்ட திருத்தத்தில் தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் பற்றி குறிப்பிடப்படவில்லை.
இச்சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிராக பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்திலும் பல இடங்களில் போராட்ட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டம் தீவிரமடைந்ததன் காரணமாக குறிப்பிட்ட இடங்களில் டெலிபோன் இணைப்பு, இன்டர்நெட் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் தற்போது அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என தெரிவித்துளளது. குடியுரிமை திருத்த சட்டத்திற்க்கான விதிமுறைகள் மக்கள் கருத்துக்களை கேட்டபிறகு தான் வகுக்கப்படவேண்டும். விதிமுறைகள் சரிபார்க்கபட்டுத்தான் சட்டம் அமலுக்கு வரும். தற்போது வரை அச்சட்டம் அமல்படுத்தப்படவில்லை.
டெல்லி, உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பின்னரே சட்டம் அமலுக்கு வரும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.