தனியார் ரயில் தாமதமாக வந்தாலும் , முன்பே வந்தாலும் அபராதம் – ரெயில்வே அறிவிப்பு .!
இந்தியா முழுவதும் குறிப்பிட்ட 109 வழித்தடங்களில் 151 தனியார் ரயில்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, 2023-ஆம் ஆண்டு 12 ரயில்களும், 2023-ஆம் ஆண்டு 45 ரயில்களும், 2025-ஆம் ஆண்டு 50 ரயில்களும், 2026-ஆம் ஆண்டு 44 ரயில்கள் என மொத்தம் 151 தனியார் ரயில்களை வருகின்ற 2027-ஆம் ஆண்டிற்குள் இயக்கப்படும் என ரயில்வே தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தனியார் ரயில் நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை ரெயில்வே நேற்று வெளியிட்டது. அதில், தனியார் ரயில்கள் வருடத்தில் 95 சதவீதம் குறித்த நேரத்தில் இயக்க வேண்டும். ரயில்வே கட்டமைப்பை பயன்படுத்த 1 கி.மீ.க்கு ரூ.512 தனியார் நிறுவனங்கள் செலுத்த வேண்டும். தனியார் ரயில் 10 நிமிடத்துக்கு முன்பே சென்றாலும் அபராதம் செலுத்த வேண்டும்.
அந்த அபராதம் 10 கி.மீ. தூர பயன்பாட்டுக்கான அபராத தொகையாக வசூலிக்கப்படும். தனியார் ரயில் தாமதமாக வர ரயில்வே காரணமாக இருந்தால் ரயில்வே துறை இழப்பீடு கொடுக்கும். ஒரு தனியார் ரயில் ரத்து செய்ய அந்த தனியார் நிறுவனம் காரணமாக இருந்தால், பயன்பாட்டு கட்டணத்தில் 4-கில் 1 பகுதி அபராதமாக வசூல் செய்யப்படும்.
அதுவே,ரயிலை ரத்து செய்ய ரயில்வே காரணமாக இருந்தால் அந்த தொகையை ரயில்வே வழங்கும். ரயில்கள் தாமதம் வருவதற்கு தனியார் நிறுவனமும், ரயில்வே துறையும் காரணமாக இருந்தால், 70 சதவீத பொறுப்பை தனியார் நிறுவனமே ஏற்க வேண்டும். ரயில் தாமதமாக வர மோசமான வானிலை, விபத்து, போராட்டம், ஆகியவை காரணமாக இருந்தால் தனியார் நிறுவனமும், ரயில்வே துறையும் இழப்பீடு வழங்க தேவையில்லை.