திருப்பதி மரணங்கள்: ‘கைது நடவடிக்கை வேண்டும்’… பவன், சந்திரபாபு நாயுடுவுக்கு ரோஜா சரமாரி கேள்வி.!
திருப்பதி கோயிலில் நேற்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலியானது தொடர்பாக நடிகை ரோஜா ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார்.
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில் பக்தர்கள் கூடியதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டு 6 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
இந்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த மல்லிகா குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு ரூ. 2 லட்சம் நிவாரணமும், 6 பேர் குடும்பத்தினருக்கும் ஆந்திர அரசு ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவித்தது. இதனையடுத்து, கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்த பகுதியில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரில் ஆய்வு செய்தார். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறவுள்ளார்.
தற்பொழுது, இந்த உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக ஆந்திர மாநில முன்னாள் அமைச்சர் ரோஜா, “திருப்பதியில் கூட்ட நெரிசலில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும். தவறு செய்தவர்கள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்து சிறைக்கு அனுப்ப வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.
மேலும், புஷ்பா 2 கூட்ட நெரிசல் விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுனை கைது செய்ததைப் போல, திருப்பதி கூட்ட நெரிசல் சம்பவத்திலும் இதற்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட வேண்டும். லட்டு விவகாரத்தில் பரிகார தீட்சை செய்த துணை முதல்வர் பவன் கல்யாண், இந்த சம்பவத்திற்கும் தீட்சை செய்வாரா? அல்லது சந்திரபாபு நாயுடுவை ராஜினாமா செய்ய வைப்பாரா? என்று சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.