மோடி பெயர் சர்ச்சை: ராகுல் காந்தி நேரில் ஆஜராக பாட்னா நீதிமன்றம் சம்மன்.!
சுஷில் குமார் மோடி தாக்கல் செய்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு பாட்னா நீதிமன்றம் ஏப்ரல் 25 அன்று சம்மன் அனுப்பியுள்ளது..
அவதூறு பேச்சு:
கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது தீவிர பிரசாரம் மேற்கொண்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக மாநிலம் கோலாரில் கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பேச்சு சர்ச்சையானது. அதாவது, ஊழல் செய்துவிட்டு நாட்டை விட்டு தப்பி ஓடிய நிரவ் மோடி, லலித் மோடி ஆகியோருடன் பிரதமர் மோடியையும் சேர்த்து அவதூறாக பேசியது தொடர்பான வீடியோ அப்போது வெளியாகி வைரலானது.
சிறைத் தண்டனை விதிப்பு:
ராகுல் காந்தியின் அவதூறு பேச்சுக்கு எதிராக சூரத் மாவட்ட தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இவ்வழக்கு தொடர்பாக 4 ஆண்டுகளுக்கு பின் கடந்த மாதம் 23-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து மாஜிஸ்திரேட்டு எச்.எச்.வர்மா அதிரடியாக தீர்ப்பு வழங்கியிருந்தார்.
அவதூறு வழக்கு:
இதனையடுத்து, மோடியின் பெயர் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவதூறு பேசியதாக கூறி, பாஜகவின் ராஜ்யசபா எம்பியும், முன்னாள் துணை முதல்வருமான சுஷில் குமார் மோடி அவதூறு வழக்கு தொடர்ந்தார். முன்னதாக, ஏப்ரல் 12 ஆம் தேதி ராகுல் காந்தியை நேரில் ஆஜராகுமாறு மார்ச் 18 அன்று பாட்னா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், அந்த அவதூறு வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், ஏப்ரல் 25ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு பீகார் தலைநகர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் பிரியா குப்தா செய்தியாளர்களிடம் கூறுகையில், புகார்தாரர் தரப்பில் இருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அனைத்து ஆதாரங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இப்போது ராகுல் காந்தியின் அறிக்கை மட்டுமே பதிவு செய்யப்பட உள்ளதால், ஏப்ரல் 25ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு பீகார் தலைநகர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.