பதஞ்சலி நிறுவனத்தின் கொரோனில் மாத்திரைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு! நாள்தோறும் 10 லட்சம் ஆர்டர்கள்! – பாபா ராம்தேவ்
பதஞ்சலி நிறுவனத்தின் கொரோனில் மாத்திரைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், பதஞ்சலி நிறுவனத்தின் இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா மற்றும் பாபா ராம்தேவ் ஆகியோர், கொரோனா நோய்க்கு தங்கள் நிறுவனம் மருந்து கண்டுபிடித்துவிட்டதாக கூறினார்கள்.
இந்நிலையில், மத்திய ஆயுஷ் அமைச்சகம் எதிர்ப்புத் தெரிவித்தது. பதஞ்சலி நிறுவனம் கரோனா நோய்க்குத் தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ளது என்றால், அதுகுறித்த தகவல்களை அமைச்சகத்துக்கு அனுப்பி அதைப் பரிசோதித்து உண்மையானதுதானா என ஆய்வு செய்த பின்பு தான் விளம்பரம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து பதஞ்சலி நிறுவனம் தயாரித்த கரோனில் மருந்தை விற்பனை செய்வதில் எந்தவிதமான தடையும் இல்லை. அந்த மருந்து மனித உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்தும் மருந்து மட்டும்தான். ஆனால், கரோனா வைரஸைக் குணப்படுத்தும் மருந்து அல்ல என தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த பாபா ராம்தேவ், ‘கொரோனா வைரஸுக்கு எதிராக நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்தும் பதஞ்சலி நிறுவனத்தின் மாத்திரையான கொரோனிலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. நாள்தோறும் 10லட்சம் மாத்திரைகளுக்கான ஆர்டர்கள் வருகின்றன. சப்ளையின் அளவை நாள்தோறும் ஒரு லட்சமாக உயர்த்தவும் தொடர்ந்து முயற்சித்து வருகிறோம்.’ என தெரிவித்துள்ளார்.