இனிமேல் காரில் பயணிப்பவர்கள் கண்டிப்பாக சீட் பெல்ட் அணிய வேண்டும் – நிதின் கட்கரி
இனி கார்களில் அமர்ந்து செல்லும் அனைவரும் கட்டாயம் சீட் பெல்ட் அணியவேண்டும் என்று மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவுறுத்தல்.
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்ட்ரி ஞாயிற்று கிழமை(செப் 4) அன்று கார் விபத்தில் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், மிஸ்ட்ரி மற்றும் அவரது நண்பர் இருவரும் பின் இருக்கையில் சீட் பெல்ட் அணியாமல் பயணித்ததால் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த விபத்து ஏற்பட்ட பிறகு அரசு இனி கார்களில் அமர்ந்து செல்லும் அனைவரும் கட்டாயம் சீட் பெல்ட் அணியவேண்டும் என்ற சட்டத்தை விரைவில் அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விதியை மீறினால், ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்றும், இதற்காக கார்களில் அலாரம் சிஸ்டம் அமைக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த 2020-ல் மட்டும் கார்களில் சீட் பெல்ட் அணியாமல், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 39 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.