இன்று கூடுகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்..! வேளாண் சட்ட ரத்து மசோதா தாக்கல்..!
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் முதல்நாளான இன்று, மூன்று வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறுவது உள்ளிட்ட 26 மசோதாக்களை பாஜக தலைமையிலான மத்திய அரசு நிறைவேற்ற திட்டம்.
மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் கடந்த ஒரு வருட காலமாக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 3 வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இதனை அடுத்து மத்திய வேளாண்துறை அமைச்சர் தோமர் நவம்பர் 29-ஆம் தேதியன்று கூடும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளான அன்று 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று டெல்லியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்குகிறது. இந்த குளிர்கால கூட்டத்தொடர் டிச.23-ஆம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், முதல் நாளான இன்று மூன்று வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறுவது உள்ளிட்ட 26 மசோதாக்களை பாஜக தலைமையிலான மத்திய அரசு நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.