நாடாளுமன்ற கூட்டத்தொடர்; 16 புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்!
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 16 புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்.
ஒவ்வொரு ஆறு மாதத்திற்குக் குறைந்தது ஒரு முறையாவது நாடாளுமன்றம் கூட வேண்டும் என்ற விதி உள்ளது. அதன்படி, கடந்த ஜூலை மாதம் நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடர் நடைபெற்றது. இதுபோன்று ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறும். ஆனால், இந்த முறை இமாச்சல பிரதேச மற்றும் குஜராத் சட்டசபைத் தேர்தல் காரணமாக குளிர்கால கூட்டத்தொடர் தாமதமானது.
இந்த சமயத்தில், இந்தாண்டு குளிர்காலக் கூட்டத் தொடர் வரும் டிசம்பர் 7-ஆம் தேதி தொடங்கும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்திருந்தார். அதன்படி, 2022 நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 7-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 29-ஆம் தேதி வரை 23 நாட்களில் 17 அமர்வுகளைக் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், டிசம்பர் 7-ஆம் தேதி கூடும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 16 புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதில், தேசிய பல் மருத்துவ ஆணைய மசோதா, தேசிய நர்சிங், மருத்துவ உதவியாளர் ஆணைய மசோதாக்கள் தாக்கலாகிறது என்று கூறப்படுகிறது.
மாநில கூட்டுறவு சங்கங்களில் நிர்வாக வலுப்படுத்துதல் மற்றும் வன பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்தல் உள்ளிட்ட மசோதாவையும் தாக்கல் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. அதேநேரம், இந்தக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் பொருளாதார சூழல், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.