இந்தியா vs பாகிஸ்தான் : நதிநீர் நிறுத்தம், மருத்துவ சேவை நிறுத்தம்., பாக். வான்வழி தடை!
சிந்து நதி நிறுத்தம், மருத்துவ விசா நிறுத்தம் என இந்தியா மேற்கொண்ட நடவடிக்கையை அடுத்து இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வழியில் பறக்க பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது.

டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதலை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே பல்வேறு தடை விதிப்புகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த தாக்குதலை நடத்தியது TRF எனும் உள்ளூர் பயங்கரவாத அமைப்பு என்றாலும், அந்த அமைப்பு பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் ஆதரவு பெற்ற அமைப்பு என குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என லஷ்கர் இ தொய்பா அமைப்பு மறுத்துள்ளது.
சிந்து நதி பகிர்வு நிறுத்தம் :
இப்படியான சூழலில் தான் பாகிஸ்தான் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே, பாகிஸ்தானுக்கு செல்லும் இந்திய நதிநீரை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி, சிந்து நதி பாகிஸ்தான் செல்வது நிறுத்தப்பட்டுள்ளது. 1960ஆம் ஆண்டு போடப்பட்ட இந்த நீர்வளப்பகிர்வு ஒப்பந்தம் மூலமாகவே 93% பாகிஸ்தானியர்ளின் நீர் தேவை பூர்த்தியாகி வந்தது. தற்போது சிந்து நதி பகிர்வு நிறுத்தப்பட்டது பாகிஸ்தானுக்கு பேரிடியாக அமைந்துள்ளது எனக் கூறப்படுகிறது.
அதேபோல, பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவ விசா வரும் ஏப்ரல் 29 வரை மட்டுமே செல்லுபடியாகும் என்றும், அதற்குள் இங்குள்ள பாகிஸ்தானியர்கள் அவர்கள் நாட்டிற்கு செல்லவும், அதேபோல பாகிஸ்தானில் உள்ள இந்தியர்கள் இந்தியாவுக்கு வரவும் கூறப்பட்டுள்ளது. இனி இந்தியர்கள் பாகிஸ்தான் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் உத்தரவு :
இப்படி இந்திய ராணுவம் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சூழலில், பாகிஸ்தான் அரசு, இந்தியாவுக்கு எதிராக ஒரு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இனி, இந்தியா விமானங்கள் பாகிஸ்தான் வான்வழி பாதையை பயன்படுத்தக் கூடாது என புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
சவுதி அரேபியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு சவூதியில் இருந்து இந்தியா திரும்புகையில் பாகிஸ்தான் வான்வழியை தவிர்த்து ஓமன், குஜராத் வழியாக டெல்லி வந்தடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பஹல்காம் தாக்குதலை அடுத்து இரு நாடுகளுக்கு இடையே இன்னும் பல்வேறு எதிரெதிர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் எனக் கூறப்படுகிறது.