பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடியை தொடர்ந்து கொடுத்துள்ளோம்… பிரதமர் மோடி பெருமிதம்.!
கார்கில் : 1999ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான கார்கில் போரில் இந்திய ராணுவ வீரர்கள் வெற்றி பெற்றதை குறிப்பிடும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 26ஆம் தேதி கார்கில் நினைவு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருடம் 25ஆம் ஆண்டு கார்கில் நினைவு தின கொண்டாட்டம் காஷ்மீர் முதல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.
கார்கில் நினைவு தினத்தை முன்னிட்டு காஷ்மீர், கார்கில் மாவட்டத்தில் டிராஸ் எனுமிடத்தில் நடைபெற்று வரும் ராணுவ நிகழ்வில் பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்வில் பிரதமர் கார்கில் நினைவுகள் பற்றி பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
அவர் பேசுகையில், கார்கில் வெற்றியின் 25 ஆண்டு கால சாட்சியாக லடாக் இன்று மாறியுள்ளது. நாட்டிற்காக செய்த தியாகங்கள் அழியாதவை என்பதை கார்கில் நினைவு தினம் சொல்கிறது. நமது ராணுவ வீரர்களுக்கு இந்த நாடு என்றும் கடமைப்பட்டிருக்கும். அவர்களுக்கு இந்த நாடு நன்றிக்கடன் பட்டுள்ளது. கார்கில் போரின் போது, நான் ஒரு சாதாரண நாட்டுக்காரனாக நமது ராணுவ வீரர்களிடையே இருந்தது எனது அதிர்ஷ்டம்.
அந்த நேரத்தில் இந்தியா அமைதியை நிலைநாட்ட முயன்றது. பதிலுக்கு, பாகிஸ்தான் மீண்டும் தனது நம்பத்தகாத முகத்தை காட்டியது. இருப்பினும், பொய்யும், பயங்கரவாதமும் நமது உண்மையால் தோற்கடிக்கப்பட்டன. ஒவ்வொரு முறையும் பாகிஸ்தான் ஏதாவது ஒரு மோசமான முயற்சியை மேற்கொண்டாலும், அதற்கு தகுந்த பதிலை கடந்த காலங்களில் கற்றுக்கொடுத்துள்ளோம்.
பாகிஸ்தான் எத்தனை முறை தவறு செய்தாலும் தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது. ஆனால், அந்த கடந்த கால வரலாற்றில் இருந்து பாகிஸ்தான் எந்த பாடத்தையும் இதுவரை கற்றுக்கொள்ளவில்லை என குறிப்பிட்டு பேசினார்.
மேலும், லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் வளர்ச்சியில் உள்ள அனைத்து தடைகளையும் இந்தியா முறியடிக்கும். பயங்கரவாதத்தின் ஆதரவாளர்களுக்கு நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். அவர்களின் மோசமான எண்ணங்கள் ஒருபோதும் நிறைவேறாது. இன்று, பயங்கரவாதத்தின் தலைவன் என் குரலை நேரடியாகக் கேட்கும் இடத்திலிருந்து நான் பேசுகிறேன் என காஷ்மீர், கார்கிலில் இருந்து பிரதமர் மோடி குறிப்பிட்டு பேசினார்.