2020-ல் 3,800 முறை அத்துமீறி பாகிஸ்தான் தாக்குதல் -இந்தியா குற்றச்சாட்டு.!
வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா நேற்று செய்தியாளர் கூட்டத்தில் பேசிய போது, இந்தியப் பகுதிகள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்துவதை வழக்கமாக கொண்டு உள்ளது. எல்லை வழியாக இந்தியாவுக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ உதவும் வகையில் மக்கள் வசிப்பிடங்கள் மீது பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்துவதாகவும் தெரிவித்தார்.
இந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் இன்று வரை, பாகிஸ்தான் இராணுவம் 3,800-க்கும் மேற்பட்ட முறை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், மேலும் பொதுமக்கள் பகுதிகளை குறிவைத்ததாகவும் கூறினார்.
எல்லையில் இருந்து ட்ரோன்கள் மூலம் ஆயுதங்களையும், போதைப்பொருட்களையும் கடத்த பாகிஸ்தான் முயன்றது என்று அவர் கூறினார். பயங்கரவாத அமைப்புகள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் பாதுகாப்பான புகலிடத்தை வழங்குகிறது என்பது அனைவருக்கும் தெரியும்.
மசூத் அசார், தாவூத் இப்ராஹிம், ஜாக்கி-உர்-ரஹ்மான் லக்வி போன்ற பல பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என ஸ்ரீவஸ்தவா கூறினார்.