லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதியின் உடலை முதல் முறையாக ஏற்றுக்கொண்ட பாகிஸ்தான்
கடந்த 30 ஆண்டுகளில் முதன்முறையாக லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாதியின் உடலை பாகிஸ்தான் ராணுவம் ஏற்றுக்கொண்டது.
திங்களன்று(செப் 5), பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கோட்லியின் சப்ஸ்கோட் கிராமத்தைச் சேர்ந்த தபாரக் ஹுசைன் (32) என்பவரின் உடல், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் (எல்ஓசி) பாகிஸ்தானை கடக்கும் இடத்தில் இந்திய ராணுவத்தால் பாகிஸ்தான் ராணுவ வீரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதியான ஹுசைன் இரண்டு நாட்களுக்கு முன்பு ரஜோரி ராணுவ மருத்துவமனையில் மாரடைப்பால் இறந்தார். ஆகஸ்ட் 21ஆம் தேதி ரஜோரி மாவட்டத்தின் நவ்ஷேரா செக்டரில் இந்திய எல்லைக்குள் ஊடுருவியபோது அவர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
ஹுசைன் தனது கூட்டாளிகளுடன் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ-யால் இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குவதற்காக இந்தியாவிற்குள் ஊடுருவியதாக அதிகரிகள் தெரிவித்தனர்.
2016 ஆம் ஆண்டில், ஹுசைன் அவரது சகோதரர் ஹாரூன் அலியுடன் அதே துறையில் கைது செய்யப்பட்டார். அடுத்த ஆண்டு வாகா-அட்டாரி எல்லை வழியாக மனிதாபிமான அடிப்படையில் அவர் திருப்பி அனுப்பப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு காஷ்மீரில் ஆயுதமேந்திய வன்முறை தொடங்கியதில் இருந்து கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் உடல்களை ஏற்க பாகிஸ்தான் மறுத்து வருகிறது. இந்நிலையில் கடந்த 30 ஆண்டுகளில் முதன்முறையாக லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாதியின் உடலை பாகிஸ்தான் ராணுவம் தற்போது ஏற்றுக்கொண்டது.
மேலும் 1999 ஆம் ஆண்டு கார்கில் போரின் போது கூட, இந்திய ராணுவத்துடன் போரிட்டு கொல்லப்பட்ட தனது வழக்கமான ராணுவ வீரர்களின் உடல்களை பாகிஸ்தான் ஏற்க மறுத்தது.