இந்தியா பாகிஸ்தான் அத்துமீறல்களை முறியடிக்க அடுத்த கட்டத்திற்கு செல்ல தயங்காது!

Default Image

ராணுவ தலைமைத் தளபதி பிபின் ராவத், எல்லையில் பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதல்கள் தொடர்ந்தால், அதை முறியடிக்க அடுத்த கட்டத்திற்கு செல்ல இந்தியா தயங்காது என  எச்சரித்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நிகழ்ச்சி ஒன்றின்போது, பிபின் ராவத் செய்தியாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது நாடாளுமன்ற குழு அளித்த அறிக்கைகளின் அடிப்படையில் செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.

நவீனமயமாக்கம் மற்றும் புதிய ஆயுதங்களை வாங்குவதற்கு நிதிநெருக்கடி இடையூறாக இருப்பதாகவும், இது போரிடும் திறன்களை குறுக்குவதாகவும் ராணுவம் தெரிவித்ததாக நாடாளுமன்ற குழு அறிக்கையில் கூறப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதேபோல சில ஆயுதங்கள் காலாவதியாகிவிட்டதாகக் கூறப்படுவது பற்றியும் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த பிபின் ராவத், ஆயுதங்கள் கொள்முதல் என்பது தொடந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டார்.

எந்த ஒரு ஆயுதமும் திடீரென ஒரு நாள் இரவில் காலாவதியாகி விடுவதில்லை என தெரிவித்த அவர், இந்த பிரச்சனை கடந்த காலத்திலும் எழுப்பப்பட்டுள்ளதாக கூறினார். எந்த ஆயுதங்கள் இருந்தாலும் அந்த ஆயுதங்களை வைத்து போரிடுவதற்கு வீரர்கள் தயாராக இருப்பதாகவும் பிபின் ராவத் தெரிவித்தார்.

பாதுகாப்புத்துறை தொடர்பான ஒட்டுமொத்த செலவினங்களும், ராணுவத்தை பராமரிப்பதற்காகவே செலவிடப்படுவதாக கூறப்படுவது கற்பனையானது என்றும் பிபின் ராவத் கூறினார்.

பாதுகாப்புத்துறைக்கென பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதியில் 35 சதவீதம் தேசத்தை கட்டமைக்கும் பணிக்கு செலவிடப்படுவதாகவும், எல்லைப் பகுதிகளில் கட்டமைப்புகள் உருவாக்கப்படுவது அதற்கு சிறந்த உதாரணம் என்றும் பிபின் ராவத் தெரிவித்தார்.

எல்லைகளில் உள்கட்டமைப்புகள் உருவாக்கப்படும்போது,  தொலைதூரங்களில் வாழும் மக்கள் மையப்பகுதிகளுடன் இணைக்கப்படுவதாகவும் இது தேசத்தை ஒருங்கிணைக்க உதவுவதாகவும் பிபின் ராவத் விளக்கம் அளித்தார்.

எல்லையில் பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதல்கள் தொடர்ந்தால், அதை முறியடிக்க அடுத்த கட்டத்திற்கு செல்ல இந்தியா தயங்காது எனவும் அவர் எச்சரித்தார். பொருளாதார வலிமையுடன் ராணுவ வலிமையையும் சீனா வளர்த்தெடுத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், உலக அளவில் அமெரிக்காவின் வலிமைக்கு சவால் விடும் வகையில் சீனா இன்று வலிமையாக இருப்பதாகத் தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்