காஷ்மீரில் இருந்து வெளியேறும் சுற்றுலா பயணிகள்., விமான சேவை அதிகரிப்பு! தமிழர்கள் நிலை என்ன?
காஷ்மீர் ஸ்ரீநகரில் விமான சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது. 28 தமிழர்கள் ஸ்ரீநகரில் உள்ள நிலையில், 40 பேர் டெல்லியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

டெல்லி : நேற்று ( ஏப்ரல் 22) காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பா வின் ஆதரவு அமைப்பான TRF பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
7 சிறப்பு விமானங்கள் :
இந்த தாக்குதலை அடுத்து காஷ்மீரில் உள்ள சுற்றுலா பயணிகள் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு வருகின்றனர். சுற்றுலா பயணிகளை விரைவாக சொந்த ஊர் அனுப்பும் பொருட்டு 7 சிறப்பு விமானங்களை இயக்க மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, இண்டிகோ, ஏர் இந்தியா மற்றும் ஸ்பைஸ்ஜெட் ஆகிய விமான நிறுவனங்கள் இன்று (புதன்கிழமை) முதல் ஸ்ரீநகரில் இருந்து 7 கூடுதல் விமானங்களை சேர்த்துள்ளன.
விமானப் போக்குவரத்து அமைச்சகம் வழங்கிய தகவலின்படி, சுற்றுலா பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு கூடுதல் விமானங்கள் தயார் நிலையில் உள்ளன என்று மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.ராம் மோகன் நாயுடு தெரிவித்தார்.
அவர் கூறியதன் பெயரில், ஸ்ரீநகரில் இருந்து டெல்லி, மும்பை செல்லும் விமானங்களில் கூடுதல் கட்டண உயர்வைத் தவிர்ப்பதற்கு அரசாங்கம் கடுமையான அறிவுறுத்தல்களை விமான சேவை நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளது, மேலும், விமான கட்டணங்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
3,337 சுற்றுலா பயணிகள் வெளியேற்றம் :
அனைத்து விமான நிறுவனங்களும் ஒரு வாரத்திற்கு ஸ்ரீநகருக்கு தங்குதடையின்றி செல்லும். அந்த விமான சேவைகளில் தேதி மாற்றம் மற்றும் ரத்து செய்யும் கட்டணங்களை தள்ளுபடி செய்துள்ளன. ஆரம்பத்தில், ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ ஆகிய நிறுவனங்கள் தலா 2 கூடுதல் விமானங்களை ஸ்ரீநகரில் இருந்து டெல்லி மற்றும் மும்பைக்கு செல்லும் ஏன அறிவித்துள்ளது.
மத்திய அமைச்சர் கூறியதன்படி, இன்று (புதன்கிழமை) காலை 6 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை, ஸ்ரீநகர் விமான நிலையத்தில் சுமார் 20 விமானங்கள் புறப்பட்டுள்ளன. மொத்தம் 3,337 பேர் ஸ்ரீநகர் விட்டு வெளியே வந்துள்ளனர் எனக் கூறியுள்ளார் .
தமிழக பயணிகள் :
காஷ்மீரில் உள்ள 28 தமிழர்கள் மீட்கப்பட்டு தற்போது ஸ்ரீநகரில் உள்ள ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தீவிரவாத தாக்குதலில் காயமடைந்த 3 தமிழர்களுக்கு ஸ்ரீநகரில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில் ஒருவர் இன்று தமிழகம் அழைத்துவரப்பட உள்ளார்.
மேலும், ஜம்மு காஷ்மீர் செல்ல இருந்த சுற்றுலாப் பயணிகள் தலைநகர் டெல்லிக்கு திரும்பினர். அங்கு தமிழக அரசு பிரதிநிதி அவர்களை வரவேற்றுள்ளார். இன்று மாலை ரயில் மூலம் அவர்கள் தமிழ்நாடு திரும்ப தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.