பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்…தகுந்த பதிலடி அளிக்கப்படும்! ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!
பயங்கரவாதிகள் நடத்திய இந்தக் கோழைத்தனமான தாக்குதலால் பல அப்பாவிகளின் உயிர் பறிபோயுள்ளது என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் பிரபல சுற்றுலாத் தலமான பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த திடீர் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்ததில் இரண்டு வெளிநாட்டவர்களும் அடங்குவர். இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து அடுத்ததாக மத்திய அரசு அதிரடியான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.
உதாரணமாக, அட்டாரி-வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவு, பாகிஸ்தானியருக்கு இந்திய விசா வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது என அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இந்த சூழலில், தாக்குதல் சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், டெல்லியில்செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்து கடும் கண்டனம் தெரிவித்தார்.
இது தொடர்பாக பேசிய அவர் ” பஹல்காம் தாக்குதல் இந்தியாவின் இதயத்தில் ஆழமான காயத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கோழைத்தனமான மற்றும் மிருகத்தனமான செயலில் 26 அப்பாவி உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன, இதில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் அடங்குவர். இந்தத் தாக்குதல் வெறும் தாக்குதல் மட்டுமல்ல, இந்தியாவின் அமைதி மற்றும் மனிதநேயத்தின் மீதான தாக்குதலாகும்.
இதற்கு மூளையாகச் செயல்பட்டவர்கள், இதைத் திட்டமிட்டவர்கள், இதற்கு உதவியவர்கள் என யாராக இருந்தாலும், அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும். இந்தியாவின் பாதுகாப்புப் படைகள் அவர்களை எங்கிருந்தாலும் வேட்டையாடி தண்டிப்பார்கள். இந்தத் தாக்குதல் ஒரு குறிப்பிட்ட மதத்தை குறிவைத்து நடத்தப்பட்டது என்று சிலர் கூறலாம், ஆனால் இது மனித குலத்துக்கு எதிரான குற்றமாகும். பயங்கரவாதிகளுக்கு மதமோ, மனிதநேயமோ இல்லை. அவர்கள் அப்பாவிகளைக் கொல்வதன் மூலம் தங்கள் கோழைத்தனத்தையும், வன்மத்தையும் மட்டுமே வெளிப்படுத்துகிறார்கள்.
இந்தச் சம்பவம் நமக்கு மிகுந்த வலியை அளித்திருக்கிறது, ஆனால் இந்தியாவின் உறுதியை இது பலவீனப்படுத்தாது. மாறாக, தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்ற நமது உறுதியை இது மேலும் வலுப்படுத்தியுள்ளது. நமது பாதுகாப்புப் படைகள், உளவுத்துறை அமைப்புகள், மற்றும் உள்ளூர் காவல்துறை ஆகியவை இந்தத் தாக்குதலுக்கு பின்னால் உள்ளவர்களைக் கண்டறியும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளன. இந்தத் தருணத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். மத்திய அரசு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் ஆதரவை வழங்கும்” எனவும் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.