“பஹல்காம் தாக்குதல்… ரத்தம் கொதிக்கிறது” – பிரதமர் மோடி ஆவேசம்.!
பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் 140 கோடி இந்தியர்களின் ஒற்றுமையே நமது மிகப்பெரிய பலம் என்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியிருக்கிறார்.

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள், குற்றவாளிகள் கடுமையான பதிலடியை எதிர்கொள்வார்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார். பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
இரு நாடுகளும் எதிரெதிர் நாடுகளுக்கு எதிராக பல்வேறு தடை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, நாட்டையே துயரத்தில் ஆழ்த்திய இந்தத் தாக்குதல் குறித்து ஆழ்ந்த வேதனை தெரிவித்தார்.
மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய அவர், ”ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாத சம்பவம் நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் காயப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஒவ்வொரு இந்தியரும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறார்கள்.
ஒருவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், எந்த மொழியைப் பேசினாலும், இந்தத் தாக்குதலில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் வலியை ஒருவர் உணர்கிறார். பயங்கரவாதத் தாக்குதலின் படங்களைப் பார்த்த பிறகு ஒவ்வொரு இந்தியரின் இரத்தமும் கொதிக்கிறது என்பதை என்னால் உணர முடிகிறது.
சர்வதேச தலைவர்கள் என்னைத் தொடர்புகொண்டு இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தனர் எனக் கூறினார். முழு உலகமும் நம்முடன் நிற்கிறது என நம்பிக்கை தெரிவித்தார். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்கும் என்றும் மோடி உறுதியளித்தார். மேலும், பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் நாட்டின் ஒற்றுமையும், 140 கோடி இந்தியர்களின் ஒற்றுமையும் அதன் மிகப்பெரிய பலம் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.