நேற்று சுந்தர் பிச்சைக்கு பத்ம பூஷண் விருது, இன்று வழக்குப் பதிவு..!
கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை உட்பட 6 நிறுவன அதிகாரிகள் மீது மும்பை காவல்துறை பதிவு செய்துள்ளது.
குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்று கூகுளின் முதல் இந்திய தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சைக்கு பத்ம பூஷன் விருதை இந்திய அரசு அறிவித்தது. வர்த்தகம் மற்றும் தொழில் துறையில் சிறந்த பங்களிப்பிற்காக சுந்தர் பிச்சைக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று சுந்தர் பிச்சை மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பாலிவுட் தயாரிப்பாளர் இயக்குனர் சுனில் தர்ஷன் கூகுள் சிஇஓ பிச்சை உட்பட 6 கூகுள் நிர்வாகிகள் மீது மும்பையில் புகார் அளித்தார். இதுகுறித்து திரைப்பட இயக்குநர் சுனில் தர்ஷன் அளித்த புகாரில், கூகுள் நிறுவனம் தனது ‘ஏக் ஹசீனா தி ஏக் தீவானா தா’ படத்தை யூடியூப்பில் பதிவேற்றம் செய்ய கூகுள் நிறுவனம் அனுமதியளித்துள்ளதாக புகார் கொடுத்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவின்படி, பதிப்புரிமைச் சட்டத்தை மீறியதாக கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை உட்பட 6 நிர்வாகிகள் மீது மும்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.