2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் ஓட்டுரிமை கட் – மத்திய அமைச்சர் கருத்து!
ஒரு வீட்டில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அவர்களின் பெற்றோர் ஓட்டுரிமையை பறிக்க வேண்டும் என்று மத்திய கால்நடை துறை அமைச்சர் ஆச்சார்யா கிரிராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பீகார் மாநிலம் பெகுசராய் தொகுதியில் பாஜக சார்பில் நின்று வெற்றி பெற்றவர் ஆச்சார்யா கிரிராஜ் சிங். மத்திய அமைச்சரவையில் கால்நடைத்துறை அமைச்சராக இருந்து வருகிறார். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஓன்று தெரிவித்துள்ளார். அதில் இந்தியாவில் 1947 க்கும் 2019 க்கும் இடையே மக்கள் தொகையானது 366 சதவிகிதம் அதிகரித்து இருப்பதாகவும் ஆனால் , அமெரிக்காவில் இதே காலகட்டத்தில் மக்கள் தொகையானது வெறும் 113 சதவிகிதம் தான் உயர்ந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இது மக்கள் தொகை வெடிப்பு நிலை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த, 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அவர்களுக்கு ஓட்டுரிமை ரத்து செய்யப்படும் என்ற முறையை கொண்டுவர வேண்டும் என்று கூறி இருக்கிறார். இந்த விசயத்தில் சாதி, மதம், இனம் பாராமல் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், அனைத்து கட்சியினரும் ஒன்றிணைந்து நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும் என்றும் கூறியுள்ளார்.