விவாதத்திற்கு தயார் என்றவுடன் எதிர்க்கட்சியினர் ஓடிவிடுகின்றனர்… நிர்மலா சீதாராமன்.!
மணிப்பூர் வன்முறை தொடர்பான விவகாரம் குறித்த விவாதத்திற்கு, அழைத்துவிட்டு கலந்துகொள்ளாமல் எதிர்க்கட்சியினர் ஓடிவிட்டதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடுமையாக விமர்சித்துள்ளார். நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கி 7 நாட்களும் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டு, முடக்கப்பட்டுக் கொண்டிருந்தது, இந்நிலையில் வழக்கம் போல இன்றும் நாள் முழுவதும் இரு அவைகளும் முடங்கின. காலை 11 மணிக்கு தொடங்கிய மாநிலங்களவை பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டு, 3.30 மணிக்கு மீண்டும் தொடங்கியது.
அவை தொடங்கியதும் மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தங்கர், அரசு மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த தயார் எனக்கூறி, எதிர்கட்சியினரை இருக்கையில் அமருமாறு கூறினார். ஆனால் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய கூச்சலை அடுத்து நாள்முழுவதும் அவை ஒத்திவைக்கப்படுவதாக ஜெகதீப் தங்கர் அறிவித்தார்.
எதிர்க்கட்சிகள் சார்பில் பிரதமர் மோடி, மணிப்பூர் விவகாரத்தில் விவாதம் நடத்த வேண்டும், விளக்கம் அளிக்கவேண்டும் என நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், விவாததிற்கு தயார் என்றவுடன் எதிர்க்கட்சிகள் ஓடிவிடுகின்றனர் என சாடியுள்ளார்.
மணிப்பூர் விவகாரம் அவர்களுக்கு வெறும் அரசியல் காரணம் மட்டுமே, விவாதத்தில் கலந்து கொள்ளாமல் எதிர்க்கட்சிகள் கலைந்து சென்றது, வருத்தமளிக்கிறது, இந்த விஷயத்தில் எதிர்கட்சியினர் முதலைக்கண்ணீர் வடிக்கிறார்கள் என தெளிவாக தெரிகிறது என அவர் மேலும் கூறியுள்ளார்.