கருப்பு உடையுடன் எதிர்க்கட்சிகள் போராட்டம்.. மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு!

மணிப்பூர் விவகாரத்தை கண்டித்து எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை 6-ஆவது நாளாக இன்றும் முடக்கம்.
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மக்களவையில் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு எதிர்க்கட்சிகள் எம்பிக்கள் முற்றுகையில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை 6-ஆவது நாளாக இன்று முடங்கியுள்ளது.
இதனைத்தொடர்ந்து, மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கமளிக்க வலியுறுத்தி மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டுள்ளனர். எதிர்க்கட்சிகளின் முழக்கத்தையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளும் மோடி மோடி என கோஷங்களை எழுப்பியுள்ளனர்.
இதுபோன்று எதிர்க்கட்சி எம்பிக்கள் இந்தியா, இந்தியா என முழக்கமிட்டு வருகின்றனர். இதனால் மாநிலங்களவையில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி எம்பிக்கள் மாறி மாறி முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். இதனிடையே, மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கருப்பு உடை அணிந்து இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.