எதிர்க்கட்சிகள் கூட்டம் – சோனியா காந்தி, ராகுல் காந்தி வருகை!
எதிர்க்கட்சி கூட்டத்தில் கலந்துகொள்ள சோனியா காந்தி, ராகுல் காந்தி பெங்களூருவுக்கு சென்றடைந்தனர்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகாஜூனன் கார்கே தலைமையில் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டம் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்று மற்றும் நாளை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக 24 எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்தவகையில், எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி பெங்களூரு வருகை தந்துள்ளனர்.
பெங்களூரு விமான நிலையத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருக்கு கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டிகே சிவகுமார் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் முதலாவது கூட்டம் நடைபெற்ற நிலையில், பெங்களுருவில் இரண்டாவது கூட்டம் நடைபெற உள்ளது.
திமுக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 20க்கும் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர். தமிழகத்தில் இருந்து திமுக தலைவரும், முதல்வருமான முக ஸ்டாலினும் கூட்டத்தில் பங்கேற்க பெங்களூரு சென்றடைந்தார்.
இதுபோன்று, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பெங்களூருவிக்கு வருகை தந்துள்ளனர். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார். எதிர்க்கட்சி தலைவர்களுக்கு இன்று மாலை சோனியா காந்தி தேநீர் விருந்து அளிக்க உள்ளார்.