மணிப்பூர் ஆளுநருடன் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சந்திப்பு! அமைதியை நிலைநாட்ட கோரி வலியுறுத்தல்!
மணிப்பூர் மாநிலத்தில் இரு பிரிவினர்கள் இடையே ஏற்பட்ட கலவரம் தொடர்பாக அங்குள்ள மக்களை நேரில் சந்திக்க காங்கிரஸ், திமுக, ஆம்ஆத்மி உள்ளிட்ட இந்தியா (I.N.D.I.A. ) கூட்டணி கட்சி தலைவர்கள் இரண்டு நாள் பயணமாக மணிப்பூர் செல்வார்கள் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், விமானம் மூலம் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் நேற்று மணிப்பூர் தலைநகர் இம்பால் சென்றடைந்தனர். அங்கு நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தறிந்தனர்.
இந்நிலையில், மணிப்பூர் சென்றுள்ள இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் இரண்டாவது நாளான இன்று மணிப்பூர் ஆளுநர் அனுசுயா உகேவை நேரில் சென்று சந்தித்துள்ளனர். நேற்று முகாமிலில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்ததை தொடர்ந்து இன்று ஆளுநரை சந்தித்துள்ளனர்.
இந்த சந்திப்பில் மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.