ஜெய் பீம், ஜெய் பீம் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கம் – இரு அவைகளும் ஒத்திவைப்பு!
அம்பேத்கரை அவமதித்ததற்கு அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லி: அம்பேத்கர் பெயர் இப்போது ஒரு பேஷன் ஆகிவிட்டது. அவர் பெயருக்கு பதில் கடவுளின் பெயரை சொல்லி இருந்தால் ஏழு ஜென்மம் சொர்க்கம் கிடைத்திருக்கும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷாவின் இந்த பேச்சு எதிர்க்கட்சியினரை கொந்தளிக்கச் செய்துள்ளது.
நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் இவ்வாறு அமித் ஷா விமர்சித்த நிலையில், அதனைக் கண்டித்து இன்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஜெய் பீம்.. ஜெய் பீம்.. முழக்கங்களோடு நாடாளுமன்ற வளாகத்தில் அமித் ஷாவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், ஒன்றிய அமைச்சர் அமித்ஷா அம்பேத்கர் பற்றி அவதூறாகப் பேசியது குறித்து அவையை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் நோட்டீஸ் வழங்கியது. இப்படி, நாடாளுமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் கடும் எதிர்ப்பு வலுத்துள்ளது.
இதனை தொடர்ந்து, அமித்ஷா மன்னிப்பு கேட்க வலியுறுத்தி மக்களவையிலும், மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் ‘ஜெய்பீம்’ முழக்கம் எழுப்பி, கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சி தோல்வியடைந்ததால், பிற்பகல் 2 மணி வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.