மாநிலங்களவையில் கடும் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி – வெங்கையா நாயுடு தலைமையில் ஆலோசனை.!
நாடாளுமன்ற மாநிலங்களவையில் கடும் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக வெங்கையா நாயுடு தலைமையில் ஆலோசனை.
மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு தலைமையில் அவரது இல்லத்தில் உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி மற்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அவை விதிமுறைகள் அடங்கிய புத்தகங்களை கிழித்து அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீது அவர் அதிருப்தியில் இருப்பதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வெங்கையா நாயுடு, துணை சபாநாயகருடன் கலந்தாலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இன்று வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. விவாதத்தின் போது எதிர்க்கட்சிகள் அவையில் கடும் எதிர்ப்பு அமளியில் ஈடுபட்டனர். இதனால், மாநிலங்களவை 10 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து வேளாண் மசோதாக்கள் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு மாநிலங்களவையில் விவசாயிகள், வேளாண் விளைபொருட்கள் குறித்த சட்டத் திருத்த மசோதாக்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.