சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க ஆபரேஷன் காவேரி..! ஜெய்சங்கர் ட்வீட்..!

Default Image

சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க ஆபரேஷன் காவேரி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிவித்துள்ளார்.

சூடான் ராணுவ மோதல்: 

சூடான் நாட்டில் ராணுவத்துக்கும், துணை ராணுவ ஆதரவு படையினருக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் ஏற்பட்டு கடும் துப்பாக்கிச் சூடு மற்றும் கலவரங்கள் நடந்து வருகிறது. ஹெலிகாப்டர்கள் மூலமும் பயங்கரமாக தாக்குதல் நடந்து வருவதால் சூடான் முழுவதும் பரபரப்பான சூழல் நிலவுகிறது. இந்த மோதலினால் உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மீட்பு நடவடிக்கை:

இதுவரை இந்த மோதலில் கிட்டத்தட்ட 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 3,351 பேர் காயமடைந்துள்ளதாகவும் (WHO) உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. சூடானில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் மோதலுக்கு மத்தியில், உலகெங்கிலும் உள்ள நாடுகள் அங்கு சிக்கித் தவிக்கும் குடிமக்களை மீட்பதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளன. அந்த வகையில், தற்பொழுது சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையை இந்தியா தொடங்கியுள்ளது.

ஆபரேஷன் காவேரி:

இந்த மீட்புப்பணிக்கு ஆபரேஷன் காவேரி என்று பெயரிடப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சூடானில் சிக்கித் தவிக்கும் எங்கள் குடிமக்களை மீட்க ஆபரேஷன் காவேரி நடந்து வருகிறது. சுமார் 500 இந்தியர்கள் சூடானின் துறைமுகத்தை வந்தடைந்துள்ளனர். எங்கள் கப்பல்கள் மற்றும் விமானங்கள் அவர்களை வீட்டிற்கு அழைத்து வர தயாராக உள்ளன. சூடானில் உள்ள எங்கள் சகோதரர்கள் அனைவருக்கும் உதவ உறுதிபூண்டுள்ளோம் என்று பதிவிட்டுள்ளார்.

388 பேர் வெளியேற்றம் :

மேலும், சூடானில் 4,000 இந்தியர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக, சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள வெளியுறவுத் துறை அமைச்சர்களுடன், ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்திய சில நாட்களுக்குப் பிறகு இந்த வெளியேற்றம் வந்துள்ளது. ஏற்கனவே, சூடானில் இருந்து இந்தியர்கள் உட்பட 388 பேர் வெளியேற்றப்பட்டதாக இந்தியாவில் உள்ள பிரான்ஸ் தூதரகம் தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்