ஆபரேஷன் அஜய் : இஸ்ரேலில் இருந்து பத்திரமாக டெல்லி வந்தடைந்த 212 இந்தியர்கள்.!
கடந்த 6 நாட்காளாக இஸ்ரேல் – ஹாமாஸ் அமைப்பு தாக்குதல் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் தீவிரமடைந்து வருகிறது. முதலில் ஹமாஸ் அமைப்பு தங்கள் தாக்குதலை இஸ்ரேல் மீது தொடுத்தது. அதன் பிறகு இஸ்ரேல் தங்கள் பதில் தாக்குதலை கடுமையாக நிகழ்த்தி வருகிறது.
ஹமாஸ் அமைப்பினர் அதிகம் இருப்பதாக அறியப்படும் காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தினர் தாக்குதலை தொடர்ந்து வருகின்றனர். வான்வெளி தாக்குதல் மட்டுமின்றி தற்போது தரைவழி தாக்குதலையும் இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் காசா பகுதியில் இருந்து பாலஸ்தீன மக்கள் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பு இடையேயான தொடர் தாக்குதல் காரணமாக விமான சேவைகள் அந்த நாடுகளுக்கு கிட்டத்தட்ட முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால், படிப்பு, வேலைவாப்பு , புனித யாத்திரை என பல்வேறு காரணங்களுக்காக இஸ்ரேல் சென்று இருந்த இந்தியர்கள் நாடு திரும்ப முடியாத சூழல் உருவானது..
24 மணிநேரத்தில் பாலஸ்தீன மக்களை வெளியேற்றாவிட்டால் பட்டினி சாவு ஏற்படும்.! ஐநா எச்சரிக்கை.!
இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு “ஆபரேசன் அஜய்” எனும் திட்டத்தை நேற்று முன் தினம் அறிவித்தது, அதன் பெயரில் சிறப்பு விமானம் மூலம் , இஸ்ரேலில் இருந்து தாயகம் திரும்ப தவிக்கும் இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, அதற்காக இஸ்ரேல் டெல்-அவிவ்வில் இருக்கும் இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு தங்கள் விவரங்களை அளிக்குமாறு இஸ்ரேலில் இருக்கும் இந்தியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி, முன்பதிவு செய்து இருந்த 212 இந்தியர்கள் நேற்று இரவு சிறப்பு விமானம் மூலம் இஸ்ரேலில் உள்ள பென் குரியன் விமான நிலையத்திலிருந்து டெல்லி நோக்கி புறப்பட்டனர். இந்த விமானம், இன்று அதிகாலை டெல்லி வந்தடைந்தது. இஸ்ரேலில் இருந்து தாயகம் திரும்பியவர்களை வரவேற்க டெல்லி விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் உடனிருந்தார்.
மேலும் இந்தியர்களை மீட்க, தேவை ஏற்பட்டால் இந்திய கடற்படை கப்பல்களும் அனுப்பப்படும் என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலில் மாணவர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் வர்த்தகர்கள் உட்பட சுமார் 18,000 இந்தியர்கள் அங்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.