Operation Ajay: 230 இந்தியர்களுடன் முதல் விமானம் நாளை வருகை.!
இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களில் முதற்கட்டமாக 230 பேருடன் முதல் விமானம் நாளை காலை வருவதாக வெளியுறவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையேயான போர் 6-வது நாளாக இன்றும் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த தாக்குதல் தொடர்பாக இதுவரை இஸ்ரேல் – பாலஸ்தீனியர்கள் என இரு நாட்டை சேர்ந்த சுமார் 2 ஆயிரதிற்க்கும் மேற்பட்டோர் கூறப்படுகிறது.
இந்நிலையில், அங்கு சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் முயற்சியில் இந்திய அரசு ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேலில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக மத்திய அரசு ஆபரேஷன் அஜய் எனும் திட்டத்தை தொடங்கியுள்ளது.
இந்த “ஆபரேஷன் அஜய்” திட்டத்தின் கீழ் இன்று சிறப்பு விமானம் மூலம் இந்தியர்கள் நாடு திரும்ப உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்ரேஷன் அஜய்’ மூலம், முதல்கட்டமாக 230 பேரை இந்தியாவுக்கு அழைத்துவருவதற்கான சிறப்பு விமானம் நாளை இந்தியா வருகிறது. தற்போது, இந்த விமானம் இஸ்ரேலில் இருந்து இன்று இரவு 9 மணிக்கு புறப்படும் என்றும் அதில் பயணிப்பவர்களிடம் இருந்து கட்டணம் எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது, அவர்கள் திரும்புவதற்கான செலவை அரசே ஏற்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், அக்டோபர் 7 ஆம் தேதி ஏர் இந்தியா நிறுவனம் தனது விமான சேவையை இஸ்ரேலில் போர் காரணமாக, திடீரென நிறுத்தியதால் இந்தியாவுக்குப் பயணம் செய்ய முடியாமல் போன பயணிகளுக்கு முதலில் இந்த விமான மூலம் திரும்பி வருவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
பாலஸ்தீன ஹமாஸுடன் தற்போது போரில் ஈடுபட்டு வரும் இஸ்ரேலில் சுமார் 18,000 இந்தியர்கள் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த போரில், இந்தியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை, ஒரே ஒரு இந்தியர் மட்டும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனஇந்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் பேட்டி அளித்துள்ளார்.
இதற்கிடையில், இஸ்ரேல் பிரதமரை, பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு போர் நிலவரம் குறித்து பேசினார். அதுமட்டுமில்லாமல், இஸ்ரேலில் இருக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.