தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு..! கர்நாடகா விவசாயிகள் போராட்டம்…!
கடந்த 11-ஆம் தேதி டெல்லியில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22வது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகம், கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர். தமிழக அரசின் சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில், தமிழகத்திற்கான காவிரி நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய 38 டிஎம்சி நீரை உடனே திறந்துவிட உத்தரவிட வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஆனால், தமிழ்நாடு அரசின் கோரிக்கை ஏற்கப்படாததால் கூட்டத்தில் இருந்து தமிழக அரசின் அதிகாரிகள் குழு வெளிநடப்பு செய்தது. அதன்பின், காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.
இந்த நிலையில், கர்நாடக அரசு காவிரி நீரை தமிழகத்திற்கு திறந்து விட்டாலும், மிக குறைவான அளவிலேயே திறந்து விடுவதாக கூறப்பட்டது. மேலும் காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு நாடவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், காவிரி நீரை திறந்துவிடக்கூடாது என கர்நாடகா முதல்வர் சித்தராமையாவுக்கு, முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை கடிதம் எழுதியிருந்தார்.
இதனை தொடர்ந்து, கர்நாடக அரசு காவிரி நீரை தமிழகத்திற்கு திறந்துவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகா விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து, ஆணையத்தில் முறையிட, கர்நாடகா அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.