டெல்லியில் ஒரு ஆக்சிஜன் ஆலை மட்டுமே இயங்குகிறது – டெல்லி அரசு!
டெல்லியில் தற்பொழுது ஒரே ஒரு ஆக்சிஜன் ஆலை மட்டுமே இயங்கி வருவதாக டெல்லி அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர். எனவே நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்க தேவையான ஆக்சிஜன் வசதியின்றி மருத்துவமனை நிர்வாகம் அனைத்தும் திணறி வருகிறது. இந்நிலையில் தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் தீவிரம் மிக அதிகமாக உள்ள நிலையில், டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறையும் மிக அதிகளவில் உள்ளது. இதனால் நாடு முழுவதும் 162 ஆக்சிஜன் ஆலை அமைக்கும் பணி தொடங்கியது.
இந்நிலையில் இந்த பணி தோல்வி அடைந்துவிட்டது, தாமதப்படுத்தப்படுகிறது என கூறுவது தவறானது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா முழுவதும் 162 ஆக்சிஜன் ஆலைகள் அமைக்க மத்திய அரசு முடிவு செய்து அக்டோபர் 2020ஆம் ஆண்டு அதற்கான அறிவிப்பை வெளியிட்டது என்பது யாவரும் அறிந்தது என தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஆலைகள் அனைத்தும் கடந்த வருடம் டிசம்பர் உள்ளேயே நிறுவப்பட்டு மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தாலும், இதுவரை 140 ஆலைகளுக்கான ஒப்பந்தத்தை மத்திய அரசு தனியாருக்கு வழங்கிவிட்டதாகவும் இதன் விளைவாக இந்தியா முழுவதும் 162 மையங்களில் 10 ஆலைகள் கூட இன்றுவரை செயல்படவில்லை எனவும், டெல்லியில் ஒரு ஆலை மட்டுமே செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.