டெல்லி முதல்வர் மகளிடம் ஆன்லைனில் பண மோசடி…! 3 பேர் கைது…!
டெல்லி முதல்வர் மகளிடம் ஆன்லைனில் பண மோசடியில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த போலீசார்.
இன்று ஆன்லைன் மோசடி என்பது மிகவும் சகஜமாக மாறியுள்ளது. ஆன்லைன் மோசடி செய்பவர்கள் பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை பலரையும் ஏமாற்றி வருகின்றனர். அந்த வகையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகளான ஹர்ஷிதா தனது பழைய சோபாவை ஆன்லைனில் விற்பதற்காக, தனியார் இணையத்தில் பதிவு செய்திருந்தார்.
இதனையடுத்து அவரை மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு அதனை வாங்குவதாக விருப்பம் தெரிவித்தார். பின் ஆன்லைன் மூலம் பணம் செலுத்துவதாக கூறி, அவர் ஒரு கியூ ஆர் கோடை அனுப்பி அதை ஸ்கேன் செய்யுமாறும் கூறியுள்ளார். ஹர்ஸிதா அதை ஸ்கேன் செய்தபோது, அவரது வங்கி கணக்கில் சிறிய தொகை ஒன்று சேர்ந்துள்ளது.
பின் முழு தொகையை செலுத்துவதாக கூறி மற்றொரு கியூ ஆர் கோடு அனுப்பினார் அதை ஹர்ஷிதா ஸ்கேன் செய்தபோது அவரது வங்கி கணக்கில் இருந்து முதலில் ரூ.20,000, பின் ரூ.14,000 பணம் எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து டெல்லி போலீசாரிடம், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்தார். இது தொடர்பாக விசாரித்த போலீசார், ஹரியானாவின் நூ பகுதியை சேர்ந்த சாஜித், உத்தரப்பிரதேசத்தின் மதுராவை சேர்ந்த கபில், மன்விந்தர் சிங் ஆகியோரை கைது செய்தனர். இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான வாரிஸ் என்பவர் தலைமறைவாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.