OneNationOneElection: ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’! தீர்மானம் கொண்டு வர INDIA கூட்டணி முடிவு!
கடந்த 2014-ல் முதல் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற நடைமுறையை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இதுதொடர்பாக கருத்து கேட்பும் கேட்கப்பட்டிருந்தது. இந்த சமயத்தில், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
அந்தவகையில், ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை சாத்தியமா என்பது குறித்து ஆராய முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான சிறப்பு குழு அமைக்கப்பட்டது. மேலும், இக்குழுவின் உறுப்பினர்களும் அறிவிக்கப்பட்டது. அதில், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, குலாம் நபி ஆசாத், என்கே சிங், சுபாஷ் காஷ்யப் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த சிறப்பு குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து முடிவெடுக்கும். அதுமட்டுமில்லாமல், நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான மசோதாவும் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்துக்கு எதிராக நாடாளுமன்ற கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வர INDIA கூட்டணி முடிவு செய்துள்ளது.
செப்.18ம் தேதி நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் தொடங்கவுள்ள நிலையில் INDIA கூட்டணி நாளை ஆலோசனை மேற்கொள்கிறது. இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளின் நாடாளுமன்ற குழு தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் நாளை ஆலோசனை நடத்த உள்ளனர். நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் செப்.18ம் தேதி முதல் 5 நாட்களுக்கு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.