ஒரே நாடு ஒரே தேர்தல் : மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதாவை நாடாளுமன்ற இரு அவைகளிலும் தாக்கல் செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி : ஒரே நேரத்தில் மக்களவை பொதுத்தேர்தல் மற்றும் அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கான பொதுத்தேர்தல் ஆகியவற்றை நடத்துவதற்கு மத்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. இதற்காக முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.
அந்த குழு, ஒரே நாடு ஒரே திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து அறிக்கையாக குடியரசு தலைவரிடம் சமர்ப்பித்தது. இதன் அடுத்தகட்ட நகர்வாக ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த சட்டமசோதாவானது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
எதிர்பார்த்தது போலவே, தற்போது ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நாடாளுமன்ற இரு அவைகளிலும் தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
நாடாளுமன்ற இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றம் செய்யப்பட்டு விட்டால் அடுத்து குடியரசு தலைவர் ஒப்புதலோடு மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.