ஒரே நாடு ஒரே தேர்தல் : அமைச்சரவை ஒப்புதல்., அடுத்தகட்ட நடவடிக்கை என்ன.?
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை அடுத்து வரும் குளிர்கால கூட்டத்தொடரில் இதனை நிறைவேற்றவும், எதிர்கட்சிகளுடன் இத்திட்டம் பற்றி ஆலோசிக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
டெல்லி : மக்களவை, மாநில சட்டசபைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும்படியாக “ஒரே நாடு ஒரே தேர்தல்” எனும் திட்டத்தை செயல்படுத்த ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது .
இதற்கான சாத்திய கூறுகள் மற்றும் அதில் உள்ள நடைமுறை சிக்கல்களை ஆய்வு செய்ய முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு ஒரு குழு அமைத்தது. இந்த குழு சில மாதங்களுக்கு முன்னர் “ஒரே நாடு ஒரே தேர்தல் ” நடத்துவதற்கான சாத்திய கூறுகள் குறித்த 18 ஆயிரம் பக்கங்கள் அடங்கிய அறிக்கையை குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் வழங்கியது.
இந்த ஆய்வறிக்கையில், மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம் என்றும் அந்த தேர்தல் நடைபெற்ற அடுத்த 100 நாட்களுக்குள் உள்ளாட்சி தேர்தல்களை நடத்தலாம் என்ற பரிந்துரைகள் உட்பட பல்வேறு சாத்தியக்கூறுகள் பற்றி கூறப்பட்டு இருந்தன.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்ட பரிந்துரைகளுக்கு நேற்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனை அடுத்து அடுத்தகட்ட நடவடிக்கையாக , இத்திட்ட வரைவை வரும் குளிர்கால மக்களவை கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மேலும் இத்திட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அர்ஜூன் ராம் மேக்வால் மற்றும் கிரண் ரிஜிஜு ஆகியோரை மத்திய அரசு நியமித்துள்ளது. இவர்கள் ஒரே நாடு ஒரே திட்டம் குறித்து எதிர்க்கட்சி அரசியல் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
ஏற்கனவே ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் தங்கள் எதிர்ப்புகளை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர். இதனால் ஒரே நாடு ஒரே திட்டம் நாடாளுமன்றத்தில் முறையாக நிறைவேற்றம் செய்யப்படுமா.? செயல்படுத்தப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் .