மக்களவையில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதா தாக்கல்!
நாடாளுமன்றத்தில் மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், "ஒரே நாடு ஒரே தேர்தல்" மசோதாவை அறிமுகப்படுத்தினார்.
டெல்லி: நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 25 அன்று தொடங்கியது, வரும் டிசம்பர் 20-ம் தேதி நிறைவடைகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் கூட்டத்தொடர் நிறைவடையும் இந்த சூழலில், சில முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், “ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதா தற்போது மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் தாக்கல் செய்துவிட்டு, அது தொடர்பாக பேசி வருகிறார். எதிர்க்கட்சிகளின் தொடர் எதிர்ப்பையும் மீறி, நாடாளுமன்றத்தில் சட்டமன்றங்கள், நாடாளுமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில், இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆனால், மக்களவையில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை கிடைத்தால் மட்டுமே மசோதா நிறைவேறும் என கூறப்படுகிறது. இந்த மசோதா, ‘மக்களவை பொதுத்தேர்தல் மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம் என்றும், இதன் மூலம் தேர்தல் செலவுகள் வெகுவாக குறைக்கப்படும் என்றும், தேர்தல் விதிமுறை காரணமாக மக்கள் நலத்திட்டங்கள் அவ்வப்போது தடைபடுவது தடுக்கப்படும்’ என மத்திய அரசு கூறி வருகிறது.
ஆனால், இந்த மசோதாவால் இந்திய ஜனநாயகத்தில் பல தீமைகளை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சிகள் ஆரம்பத்தில் இருந்தே கடும் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றன.
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, மக்களவையில் இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், மாநிலங்களவையிலும் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றம் செய்யப்பட்டு விட்டால், அடுத்து குடியரசு தலைவர் ஒப்புதலோடு மத்திய அரசு, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கையை மேற்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.