பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு வழங்க ஒரு மாதம் அவகாசம்..! சுப்ரீம் கோர்ட்..!
அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்க ஒரு மாதம் அவகாசம்.
உத்திரப்பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் பாபர் மசூதி 1992 -ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் கல்யாண் சிங் உள்ளிட்டோரை கடந்த 2001 ஆம் ஆண்டு அகமதபாத் நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிபிஐ போலீசார் மேல்முறையிடு செய்தது. இந்நிலையில், லக்னோவிலுள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் ஆகஸ்டு 31-ம் தேதிக்குள் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த மே மாதம் 8-ம் தேதி உத்தரவிட்டது.
இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 32 பேரிடம் விசாரணை முடிந்துள்ளது. அதே நேரத்தில் வழக்கு நடவடிக்கைகளை முடித்து, தீர்ப்பு வழங்குவதற்கு மேலும் அவகாசம் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்திற்கு சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேந்திர குமார் யாதவ் அறிக்கை அனுப்பினார்.
இதை பரிசீலித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நடவடிக்கைகளை முடித்து லக்னோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்க மேலும் ஒரு மாத காலம் அவகாசம் ( அதாவது செப்டம்பர் 30-ந் தேதி வரை) வழங்கி உத்தரவிட்டது.