ஒமைக்ரான் வைரஸ் பரவல் – மாநிலங்களுக்கு மத்திய அரசு அவசர கடிதம்!
ஒமைக்ரான் வைரஸ் பரவல் தொடர்பாக மாநிலங்களுக்கு மத்திய அரசு அவசர கடிதம் அனுப்பியுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கமே இன்னும் குறையாத நிலையில் தற்பொழுது தென்னாப்பிரிக்க நாட்டில் கொரோனா வைரஸ் புதிய உருமாற்றம் அடைந்து உள்ளது. இந்த வைரஸிற்கு பி.1.1.529 என மருத்துவ வல்லுநர்கள் பெயரிட்டுள்ள நிலையில், இந்த வைரசுக்கு ஒமைக்ரான் என உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது.
இந்த வைரஸ் தொற்று இஸ்ரேல், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் பரவி வருகிறது. எனவே தென் ஆப்பிரிக்க நாடுகள் உடனான சர்வதேச விமான போக்குவரத்தை பல நாடுகள் ரத்து செய்து வருகிறது. மேலும், இந்த வைரஸ் குறித்து நேற்று டெல்லியில் பிரதமர் மோடி அவர்கள் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சக செயலாளர் ராஜேஷ் பூஷன் அவர்கள் அனைத்து மாநில தலைமை செயலாளர்கள் மற்றும் யூனியன் நிர்வாகிகளுக்கு அவசர கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் ஒமைக்ரேன் வகை வைரஸ் பரவி வருவதால் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் எனவும், கொரோனா தடுப்பூசி பணிகளை விரைவுபடுத்த வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.