உமர் காலித்தை அக்டோபர் 22 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு..!
முன்னாள் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவர் உமர் காலித்திற்கு அக்டோபர் 22 வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பிப்ரவரியில், வடகிழக்கு டெல்லியில் நடந்த கலவரத்தின் பின்னணியில் சதித்திட்டத்தின் அம்சம் குறித்து விசாரிக்க எஃப்.ஐ.ஆர் தாக்கல் செய்த 200 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குடியுரிமை சட்ட ஆதரவாளர்களுக்கும், எதிர்பாளர்களுக்கும் இடையிலான வன்முறை மோதல்களில் 53 பேர் உயிரிழந்தனர், 200 பேர் காயமடைந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு டெல்லி வன்முறையில் பங்கு வகித்ததாகக் கைது செய்யப்பட்ட ஜே.என்.யு முன்னாள் மாணவர் உமர் காலித்தை கடந்த செப்டம்பர் 13 ம் தேதி டெல்லி போலீஸ் பத்து மணி நேரம் விசாரித்த பின்னர் டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு காலித்தை கைது செய்தது.
அடுத்த நாள், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, நீதிமன்றம் காலித்தை 10 நாட்கள் டெல்லி காவல்துறை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கியது. இந்நிலையில், இன்றுடன் காவல்துறை காவல் அவகாசம் முடிந்த நிலையில், உமர் காலித்தை வருகின்ற அக்டோபர் 22 வரை நீதிமன்ற காவல் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.