ஜம்மு காஷ்மீர் முதல்வராக பதவியேற்றார் உமர் அப்துல்லா!

சட்டப்பிரிவு 370 ரத்துக்கு பிறகு ஜம்மு காஷ்மீரின் முதல் முதல்வராக இன்று பதவியேற்றார் உமர் அப்துல்லா.

Omar Abdullah

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. அதில், ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்துடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும் லடாக் தனி யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, கடந்த மாதம் ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அதில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தேசிய மாநாட்டு கட்சி 42 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 6 இடங்களிலும் வெற்றிப் பெற்றது.

இதனால், இம்மாதம் கடந்த 11-ம் தேதி அன்று உமர் அப்துல்லா துணை நிலை ஆளுநரான மனோஜ் சின்ஹாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரி இருந்தார். இதனை ஏற்ற மனோஜ் சின்ஹா, உமர் அப்துல்லாவை ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

அதன்படி, இன்று காலை ஸ்ரீநகரில் அவருக்கு பதவியேற்பு விழாவானது நடைபெற்றது. இதில், துணை நிலை ஆளுநரான மனோஜ் சின்ஹா, உமர் அப்துல்லாவுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த பதவி ஏற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ஜேகேஎன்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், பிடிபி தலைவர் மெகபூபா முப்தி, ஆம்ஆத்மி கட்சி தலைவர் சஞ்சய் சிங், உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்