நவீன் பட்நாயக்கின் உடல்நிலை சீராக இல்லை… பிரதமர் மோடி பரபரப்பு.!
ஒடிசா: ‘ஒடிசா மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைந்ததும் நவீன் பட்நாயக்கின் உடல் மோசமடைந்ததற்கான காரணத்தை கண்டறிய ஒரு குழு அமைக்கப்படும்.’ – பிரதமர் மோடி.
147 சட்டமன்ற தொகுதிகளையும், 21 மக்களவை தொகுதிகளையும் கொண்ட ஒடிசா மாநிலத்தில் 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. மே 13ஆம் தேதி (4ஆம் கட்ட தேர்தல்) தொடங்கிய வாக்குப்பதிவு மூன்று கட்டங்கள் நிறைவு பெற்றது.
வரும் ஜூன் 1ஆம் தேதியன்று இறுதி கட்ட வாக்குப்பதிவு நாளன்று, ஒடிசாவில் 48 சட்டமன்ற தொகுதிகளுக்கும், 6 மக்களவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் ஒடிசாவில் அரசியல் தலைவர்களின் இறுதி கட்ட பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது.
ஒடிசாவின் பரிபடா பகுதியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, நவீன் பட்நாயக்கின் உடல்நிலை குறித்து பேசினார். நவீன் பட்நாயக்கின் உடல்நிலை சீராக இல்லை என்றும், அதன் பின்னணியில் சதி இருப்பதாகவும் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறுகையில், ‘ நவீன் பட்நாயக்கின் உடல்நிலை மோசமடைந்ததற்குப் பின்னால் ஏதோ சதி இருக்கலாம் என்று அவருக்கு நெருக்கமாக இருந்தவர்களே சந்தேகிக்கின்றனர். நவீன் பட்நாயக் உடல்நிலை மோசமடைந்ததற்கு பின்னால் உண்மையில் சதி இருக்கிறதா என்பதுதான் தற்போதைய கேள்வி. இதை அறிய ஒடிசா மக்களுக்கு உரிமை உள்ளது.
வரும் ஜூன் 10ஆம் தேதி பாஜக முதல்வர் பதவியேற்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதன் பிறகு நவீன் பட்நாயக்கின் உடல்நலக் குறைவு குறித்து விசாரிக்க சிறப்புக் குழு அமைக்கப்படும். அந்த குழு மூலம் நவீன் பட்நாயக்கின் உடல்நலக்குறைவு ஏற்பட காரணமாக ஏதேனும் சாத்திய கூறுகள் இருக்கிறதா.? ஏதேனும் விஷயம் மறைக்கப்பட்டுள்ளதா என்பது கண்டறியப்படும்.
இது நவீன் பட்நாயக்கின் உடல்நிலை தொடர்பான முக்கியமான பிரச்சினை. அவரது உடல்நிலை ஏன் இவ்வளவு வேகமாக மோசமடைந்தது என்று அவரது நலம் விரும்பிகளையே கவலையடைந்துள்ளனர். நவீன் பட்நாயக் தற்போது சுயமாக எதையும் செய்யும் நிலையில் கூட இல்லை.
ஒடிசாவில் அரசியல் திரைமறைவில் செயல்படும் செல்வாக்குமிக்க குழு கவலை அளிக்கிறது. இந்த செல்வாக்குமிக்க குழுவுக்கும் நவீன் பட்நாயக்கின் உடல்நலப் பிரச்சினைகளுக்கும் தொடர்புடையதா என்ற சந்தேகமும் எழுகிறது. விரைவில் இந்த மர்ம திரைமறைவு விலக வேண்டும்.’ என்றும் ஒடிசா பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.