நுழைவு தேர்வுகளையும் ரத்து செய்யக் கோரி பிரதமருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்..!
- நீட் உட்பட அனைத்து நுழைவு தேர்வுகளையும் ரத்து செய்யக் கோரி பிரதமருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்.
- கிராமப்புற மாணவர்கள் அதிக சிரமத்திற்குள்ளாவதால் நீட் மற்றும் பிற படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுகளை நிரந்தரமாக ரத்து செய்யவேண்டும்
மத்திய அரசால் நடத்தக்கூடிய அனைத்து நுழைவுத்தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என என கோரி பிரதமர் மோடிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். அதில், மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வினை ஆரம்ப காலத்திலிருந்தே தொடர்ந்து எதிர்த்து வந்தவர் என்னுடைய அன்புக்குரிய தலைவர், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா என்பதை நீங்கள் அறிவீர்கள்.
2011 ஆம் ஆண்டு இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கைக்கு நீட் தேர்வினை அறிமுகப்படுத்த அப்போதைய மத்திய அரசு முடிவு எடுத்தபோது, அப்போதைய தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா தனது கடுமையான ஆட்சேபனையை கடிதம் வாயிலாக அப்போதைய பிரதமருக்குத் தெரிவித்தார்.
நுழைவுத் தேர்வுகளில், ஊரகப் பகுதி மாணவர்கள் மற்றும் பின்தங்கிய சமூகப் பொருளாதார பின்னணியைக் கொண்ட மாணவர்கள், நகர்ப்புற மாணவர்களுடன் போட்டியிட முடியயது. இதற்குக் காரணம், அந்தப் பகுதிகளில் தேவையான பயிற்சி நிலையங்கள் இல்லாததும், குறித்த சமயத்தில் அதற்குத் தேவையான புத்தகங்களை பெறமுடியாததும்தான்.
பயிற்சி நிலையங்களை அணுகவும், பயிற்சிக்குத் தேவையான புத்தகங்களை பெறவும் நிதியும், அவர்கள் வசிக்கும் இருப்பிடமும் இடம் தராததால், நீட் தேர்வு என்பது சமூகப் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை ஊரகப் பகுதி மாணவர்களுக்கு பாதகமாக அமைந்துள்ளது. போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ள பயிற்சி அளிக்கும் நிறுவனங்களுக்கு கட்டணம் செலுத்த முடியாத நிலை ஊரகப் பகுதி மாணவர்களிடம் காணப்படுகிறது.
நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு அதன் காரணமாக, அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஊரகப் பகுதி மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும் பட்சத்தில், ஊரகப் பகுதிகளில் நிலவும் மருத்துவர்களின் பற்றாக்குறை ஓரளவுக்கு குறைக்கப்படும்.
தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக, ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளை அனுமதித்தது, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் கொரோனா தொற்று நோய் காரணமாக 12 ஆம் வகுப்பு சி.பி.எஸ்.இ. பொதுத் தேர்வுகளை ரத்து செய்தது போன்ற தங்களின் முத்தான அறிவிப்புகள் நல்ல வரவேற்பினையும், பாராட்டினையும் பெற்றுள்ளன என தெரிவித்தார்.
— O Panneerselvam (@OfficeOfOPS) June 6, 2021