கேரளாவில் செவிலியர் உயிரிழப்பு ..!
நிபா வைரஸ் தாக்கிய நோயாளிக்கு சிகிச்சையளித்து வந்த கேரளா செவிலியர் உயிரிழந்தார்.
கோழிக்கோட்டில் கேரளாவின் நிஃபா வைரஸ் தாக்கிய முதல் நோயாளிக்கு சிகிச்சையளிக்கும் குழுவில் செவிலியரான லினி புதுசேரியும் ((Lini Puthusery)) இருந்தார். நிஃபா வைரசால் பாதிக்கப்பட்டு தனி வார்டில் வைக்கப்படிருந்த 31 வயது லினி, அதன் பிறகு தனது கணவரையும் தனது 7 வயது மற்றும் 2 வயதுக் குழந்தைகளையும் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. மருத்துவமனையிலேயே உயிரிழந்த லினியின் உடல் வைரஸ் பரவாமல் உடனடியாக எரியூட்டப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக மருத்துவமனையின் தனி வார்டில் இருந்தபடி லினி தனது கணவருக்கு எழுதிய குறிப்பில் தான் தனது இறுதிப் பயணத்தில் இருப்பதாகவும், தன்னால் குடும்பத்தினரை சந்திக்க முடியும் என்று தோன்றவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தன் குழந்தைகளை சிறப்பாக பார்த்துக்கொள்ளுமாறும், அவர்களை தனியாக விட்டுவிட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ள அவர், குழந்தைகளுக்கு தனது அன்பை தெரிவித்துள்ளார். இந்தக் குறிப்பு இணையதளத்தில் வெளியாகி பலரின் கண்ணீரை வரவழைத்துள்ளது.