புதுச்சேரி தற்காலிக சபாநாயகராக என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ லட்சுமி நாராயணன் பதவி ஏற்பு…!
காலை 9:30 மணி அளவில் ஆளுநர் மாளிகையில் புதுவையின் சட்டப்பேரவை தற்காலிக தலைவராக லட்சுமி நாராயணன் அவர்கள் பதவி ஏற்றார்.
புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி வெற்றி பெற்றதை தொடர்ந்து, கடந்த 7ஆம் தேதி என்.ரங்கசாமி அவர்கள் முதல்வராக பொறுப்பேற்றார். இதனையடுத்து, இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின் சிகிச்சை முடிந்து, வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த 21-ஆம் தேதி தற்காலிக பேரவைத் தலைவராக என்.ஆர் காங்கிரசை சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் லட்சுமி நாராயணன் நியமிக்கப்பட்டார். இதனை அடுத்து, காலை 9:30 மணி அளவில் ஆளுநர் மாளிகையில் புதுவையின் சட்டப்பேரவை தற்காலிக தலைவராக லட்சுமி நாராயணன் அவர்கள் பதவி ஏற்றார். இவருக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இதனை தொடர்ந்து, 10 மணி அளவில் புதுவை சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியுள்ளது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய சட்டப்பேரவை உறுப்பினர்கள், நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் பதவியேற்கின்றனர்.