உத்தரகாண்ட் ஜோஷிமத் பேரிடர் பகுதியாக அறிவிப்பு!
உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட ஜோஷிமத்தில் இன்று மத்திய அரசின் 2 குழுக்கள் ஆய்வு செய்ய உள்ளன.
உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட ஜோஷிமத்தை பேரிடர் பகுதியாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஜல் சக்தி அமைச்சகத்தின் குழு உட்பட மத்திய அரசின் 2 குழுக்கள் ஜோஷிமத்தில் இன்று ஆய்வு செய்ய உள்ளன. உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஜோஷிமத் நகரம் நிலவெடிப்பு மற்றும் நிலச்சரிவு காரணமாக புதையும் அபாயத்தை எதிர்கொண்டு வருகிறது.
ஜோஷிமத் நகரில் நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளன. மேலும் சாலை விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து சுமார் 60 குடும்பங்கள் தற்காலிக மீட்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளது. சுமார் 90 குடும்பங்கள் வரை பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் இருந்து வெளியேற்றப்படலாம் எனவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
எந்தவித திட்டமும் இல்லாமல் மேற்கொள்ளப்பட்ட உள்கட்டமைப்பு மேம்பாடுகள்தான் இந்த இயற்கை பேரிடருக்கு காரணம் என சுற்றுச்சூழல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், ஜோஷிமத் நகரம் மண்ணில் புதையும் என்ற அபாயம் உள்ளதால், அந்நகரத்தை பேரிடர் பகுதியாக மத்திய அரசு அறிவித்துள்ளது.