நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் – தேதி அறிவிப்பு!
இதற்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்ததாக கிரண் ரிஜிஜு தகவல் தெரிவித்துள்ளார்.
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார். இந்நிகழ்வு பாராளுமன்றத்தின் மத்திய மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்த குளிர்கால கூட்டத்தொடரை வரும் 25-ஆம் தேதி முதல் டிசம்பர் 20-ஆம் தேதி வரை நடத்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்ததாக கிரண் ரிஜிஜு தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும், நவம்பர் 26-ஆம் தேதி, அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்டதன் 75-வது ஆண்டு விழா சம்விதன் சதன் மைய மண்டபத்தில் கொண்டாடப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தொடரில், ஒரே நாடு ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம் தொடர்பான சட்டத்திருத்த மசோதாக்கள் தாக்கலாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி, சர்ச்சைக்குரிய வக்ஃப் (திருத்தம்) மசோதா உட்பட பல முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, இந்திய தூதர்கள் மீதான குற்றச்சாட்டுகளால் தூண்டப்பட்ட இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான மோதல் குறித்த முக்கிய விவாதம் இருக்கும் என கூறப்படுகிறது.